×

வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்!: செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்..!!

சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, நிஷா பானு அமர்வில் விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜியை எப்போதில் இருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து காணொலி மூலம் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரணை செய்தார்.

அமலாக்கத்துறை காவல் குறித்து இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என 3வது நீதிபதி தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் சோசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார்.

தீர்ப்பில் நான் உறுதியாக உள்ளேன்: நீதிபதி நிஷா பானு

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அதிகாரமில்லை என்ற தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என்று நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். எனது தீர்ப்பில் நான் உறுதியாக உள்ளேன்; வழக்கில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று நீதிபதி நிஷா பானு திட்டவட்டமாக கூறினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர்நீதிமன்றம் எப்படி முடிவெடுக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

வழக்கை மற்றொரு நாள் ஒத்திவைக்க வேண்டும்: செந்தில் பாலாஜி தரப்பு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது. செந்தில் பாலாஜி தரப்பில் எங்களது வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க உள்ளோம் என என்.ஆர்.இளங்கோ குறிப்பிட்டார். வழக்கை மற்றொரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கை உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்: நீதிபதி நிஷா பானு

விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்தபின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அனைத்து அம்சங்கள் மீதும் முடிவெடுக்கும் உச்சநீதிமன்றமே இந்த மனு மீதும் முடிவு எடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கட்டும்; ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி நிஷா பானு அறிவித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை வேறு நாளுக்கு ஒத்திவைக்கலாம் என குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பு வாதம்:

செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது. நீதிமன்ற காவல் குறித்து முடிவு செய்யவே இரு நீதிபதிகள் அமர்வுக்கு 3வது நீதிபதி பரிந்துரைத்தார் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு முடித்துவைப்பு:

செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக நீதிபதி நிஷா பானு அறிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

அமலாக்கத்துறைக்கு மீண்டும் பின்னடைவு:

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது குறித்து உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை:

செந்தில் பாலாஜி வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பப்படுவாரா அல்லது விடுவிக்கப்படுவாரா என்பது உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்தே தெரிய வரும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என்ற துஷார் மேத்தாவின் வாதம் நிராகரிக்கப்பட்டது.

The post வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்!: செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,High Court ,Senthil Palaji ,Chennai ,Senthil Balaji ,Senthil Balaji Adhikari ,
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...